Sunday, February 21, 2016

ஜனநாயகத்துக்காக

http://www.onelawforall.org.uk/wp-content/plugins/lightbox-2-wordpress-plugin/lightbox/images/loading.gif
இந்தியாவை மீட்டெடுத்தல் 
    -ஜெய்ரஸ் பனாஜி-




(கட்டுரையாளர் ஜெய்ரஸ் பனாஜி, வரலாற்றாசிரியர்;  லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியர். 2015 டிசம்பர் 2 ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில் பிரசுரமான அவரது கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.)
    மூன்று அல்லது நான்காண்டுகால காங்கிரஸ் அரசின் சீரழிவு என்று ஊடகங்களால் காட்டப்பட்ட நிலையிலிருந்து இந்தியாவை மீட்கக்கூடிய தேசியத் தலைவர் நரேந்திரமோடி என்ற ஒற்றைக் கருத்தை வளர்த்தெடுத்த யுக்தியின் பலன் தான் 2014 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் வெற்றி. ஊழல் குற்றச்சாட்டுகளும், தன்னுடைய அமைச்சர் மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சர்தம் ஊழல்களைக் கட்டுப்படுத்த முடியாதவர் மன்மோகன்சிங்; என்ற பரவலான கருத்தும் காங்கிரஸ் ஆட்சியைக் களங்கப்படுத்தின. இதற்கு மாறாக, ‘இந்து’ தீவிரவாத மூர்க்க சக்திகளின் நாயகர் மோடி இந்தியாவின் வளர்ச்சிக்குரிய திட்டத்தை வைத்திருப்பவராக சித்தரிக்கப்பட்டு, பல பரிமாணங்களில் இந்திய வாக்காளர்களுக்கு விற்கப்பட்டார். ஏராளமான பொருட்செலவில், பல்வேறு வள ஆதாரங்களைக் கொண்டு மோடி விற்கப்பட்டார். மிகப்பெரிய தேர்தல் பேரணிகள், அவைபற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குப் பணம், வலுவான வர்த்தக நிறுவனத் தலைமைகளின் வெளிப்படையான ஆதரவு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் அடிமட்ட களப்பணி - இவற்றின் தாக்குதல் மூலமாக இத்தேர்தல் வெற்றி நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம் சொல்லப்பட்ட தகவல் இதுதான்: காங்கிரஸ் ஊழல் நிறைந்தது; நம்பத்தகுந்ததல்ல; கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அது, நாட்டைத் தவறாக நிர்வாகம் செய்து விட்டது.

  இந்தக் களேபரத்தில், 2004 பொதுத் தேர்தலுக்கு பி.ஜே.பி. முன்வைத்த முழக்கமான ஒளிரும் இந்தியாஎன்பது மறக்கப்பட்டது. ஏனென்றால், அப்போது பி.ஜே.பி.யும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த பிறகும் இந்தியா இன்னும் பரிதாபமான வறுமை நாடாகத்தான் இருந்ததென்பதை அவர்கள் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. மாறாக, பி.ஜே.பி. தலைமையேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் நாடு பெரும் முன்னேற்றம் கண்டதாக மக்களை நம்ப வைக்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவசியமும் இருந்தன. உலகப் பொருளாதாரத்துடன் இந்தியா மீண்டும் இணைந்ததற்குக் காரணம் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் தான் என்பதும் இங்கே ஒத்துக்கொள்ளப்படவில்லை; மறைக்கப்பட்டது.
    2004ல் வலதுசாரிகளின் அபிலாஷைத் திட்டங்களுக்கு வழிவகுத்தது ஆரம்பகால 1990கள்; அதே போல் 2002 குஜராத் சம்பவங்கள் மற்றொன்று; ஆனால், 1990களைவிட 2002 மோசமானது. குஜராத்தில் பி.ஜே.பி.க்குத் தேர்தல் சவாலாக இருந்த மாவட்டங்களிலும் தொகுதிகளிலும்தான் வன்முறை மையப் படுத்தப்பட்டது. வெகுஜனங்களின் வகுப்புவாத வன்முறை எவ்வளவு கொடூரமாகத் திட்டமிடப்பட்டதென்பதை இது காட்டியது.
புதிய அணி:
    உள்ளிருந்து வந்த ஒரு கணக்கின்படி, 2014 தேர்தலில் மோடி பெற்ற வாக்குகளில் மூன்றில் ஒருபகுதி ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் தந்தது. பி.ஜே.பி.யின் 31 விழுக்காடு வாக்குகளில் 10 விழுக்காடு தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரின் வாக்குகள்என்று இந்த ஆண்டு ஜுன் மாதம் ‘காட்ச் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கே.என். கோவிந்தாச்சாரியா கூறினார். ஆனால், இது உண்மையெனில், வழக்கமான தீவிர இந்துத்துவா ஆதரவையும் தாண்டி பரவலான ஆதரவு பி.ஜே.பி.க்கு இருந்ததையும் இது காட்டுகிறது. அன்றைய அரசு ஊழல் மிகுந்தது; திறனற்றது என்று வாக்காளர்கள் நம்பவைக்கப்பட்டனர். இதனால், இந்தியாவின் பல்வேறு சமூகக் குழுக்களின் ஆதரவை மோடி பெற்றார். வலுவான, மூர்க்கத்தனமான நவீன தாராளமயத்தின் வடிவமாக மோடி காணப்பட்டதால், பெரும் தொழில்களின் மூலதனம் ஆரம்பத்திலேயே மோடிக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கிவிட்டது. தொழில் விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் கிராமப்புற எதிர்ப்பையும் அரசு நிதி ஆதாரத்தில் சுமையாகக் காணப்படும் மானியங்களையும் ஒழித்துவிட பெரும் தொழில் மூலதனம் விரும்பியது.
    அதே போல், 1990களில் உருவான நுகர்வு கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்ட பரவலான நடுத்தர வர்க்கமும் மோடியை விரும்பியது. ஓங்கிய, ஆனால் வெறுமையான தேசியமும் இவற்றுடன் சேர்ந்து கொண்டது. [இத்தாலிய திரைப்பட இயக்குநரான] ரோசலினியின் 1959 ஆவணப்படமான ‘மாத்ரி பூமி’யின் மகத்தான, ஆழமான நோக்கத்திற்கும், இப்படிப்பட்ட தேசியத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 1990களுக்குப் பின்னர் தோன்றிய நடுத்தர வர்க்கத்திற்கும், வெகுஜனங்களுக்குமிடையே தோழமை இல்லாமல் போனது. அனைத்து விதமான அதிகாரங்களுக்கும் பணிந்து போய்க் கொண்டிருந்த இந்த நடுத்தர வர்க்கம், ஊடகங்களின் தகிடுதத்தங்களுக்கு எளிதில் இரையாகிப்போனது. அதே போல், கிராமங்களிலும் நகரங்களிலும் பெரு நகரங்களிலும் வேலையற்ற இளைஞரின் பெரும்படை மோடியுடன் சேர்ந்தது; குஜராத் மாதிரிஎன்று நம்ப வைக்கப்பட்ட இவர்கள் மத்தியில், பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரக்கூடிய கடவுளின் அவதாரமாக மோடி சித்தரிக்கப்பட்டார். இத்தனை அபிலாஷைகளின்
சேர்மானமும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் உருவாக்கமான ரட்சிக்கவல்ல தேசிய நாயகனில் சங்கமமாயின.
  குஜராத் மேலாதிக்க வன்செயல்களையும் களங்கமிக்க கடந்த காலத்தையும் தாண்டி, இந்த நாயகன் தேசிய அந்தஸ்து பெற்று மிகப் பெரிய அளவில் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்யக் கூடியவராக காட்சிப்படுத்தப்பட்டார்.
 அலையின் முடிவு:
  இன்று அதிசயங்கள் நடக்கவில்லை. அனைத்து அதிகாரங்களும் ஒரு மனிதரிடம் மையப்படுத்தப்பட்டதாலும், பிரதமரின் அலுவலகத்தின் திறமையின்மையாலும் அன்றாடப் பணிகள்கூட முடங்கிவிட்டன. அரசு அதிகாரிகளிடையேயும் அதிருப்தி உருவாகியுள்ளது. இதுவரை மிகக் கவனமாகக் காக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கும் அச்சுறுத்தல் வந்ததால் அவ்வங்கி ஊழியர் மொத்த விடுப்பில் சென்றனர். முதலீடுகளிலும் வேலைவாய்ப்புகளிலும் அபார சாதனைகளை மோடி நிகழ்த்துவார் என்ற நம்பிக்கை தளர்ந்து கொண்டிருப்பதால், மோடியின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்கி வருகிறது. உற்பத்தி மந்தமாகிவிட்டது; அன்னிய நாட்டு முதலீட்டை கவர்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பல அயல்நாட்டுப் பயணங்களால் பலனேதும் இல்லை. நிலம் கையகப்படுத்தும் அதிவீரியமான சட்டத்தை இயற்ற முடியாமல் தோற்றுப் போனது பெரும் தொழில் நிறுவனங்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கை சிதைத்துவிட்டது; பெரும் நிறுவனங்களுக்கு இவர் கொடுத்த உறுதிகளை இவரால் நிறைவேற்ற முடியுமா என்ற ஐயத்தையும் கிளப்பியுள்ளது.  
  இயலாமையாலும், செயலற்ற நிலையாலும் தொய்வடைந்த இந்த அரசு, பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தக்கூறும் சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களை தேசத்தின் எதிரிகள்என்று சித்தரிக்கிறது.
   முதலீடு குறைவாலும், பெரும் நிதி பற்றாக்குறையாலும் தூண்டி விடப்பட்ட நிதி அமைச்சர், பலவீனமான துறைகளைக் குறிவைக்கிறார். சுகாதாரம், கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது; தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் உறுதி செய்யப்பட்டிருந்த வேலைவாய்ப்புகளுக்கு உலைவைக்கப்படுகிறது; ஊதியங்களும் முடக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நிதித்திட்டங்களும் முடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன. ஓங்கிவரும் பணவீக்கத்தின் விளைவாக பெரும்பான்மை மக்களின் புரதச்சத்து உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மும்பை போன்ற ஊர்களில்; மின்சாரக் கட்டணம் எகிறிக்கொண்டிருக்கிறது; மிகப்பெரிய வாராக்கடன்களால் வங்கிகள் தடுமாறுகின்றன. உலக அளவில் கச்சா எண்ணை விலை 50 சதவீதத்துக்கும் மேலாக சரிந்து விட்டது; ஆனால் இதன் பலன் மக்களுக்கும், சமூக நலத்திட்டங்களுக்கும் திருப்பிவிடப்படப் போவதில்லை.
சமூக நலத்திட்டம்:
  பீகாரில் மோடியின் தோல்வி, மேற்கூறிய அனைத்து தோல்விகளின் சங்கமம்; இவற்றுடன் வெறுப்பு அரசியலை மக்கள் புறக்கணித்ததும் சேர்ந்து கொள்ளும். வளர்ச்சிஎன்ற பி.ஜே.பி.யின் கோஷத்தை நிதிஷ்குமார் தன் கையில் எடுத்துக் கொண்டார்; இந்த கோஷத்தைத் தன்னுடைய தனியுரிமையாக்கி வைத்திருந்த மோடியிடமிருந்து நிதிஷ்குமார் தனக்கு எடுத்துக் கொண்டார்.
    ஆனால், இந்த பீகார் வெற்றியை 2019 பொதுத் தேர்தலில் டில்லியில் உண்மையான மக்களாட்சியையும், இன்னும் வலுவான மதச்சார்பற்ற அரசையும் கொண்டுவரும் காரியமாக மாற்ற வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, வழக்கமாக எதிரெதிராக நிற்கும் வலுவான கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டணி வேண்டும்; இரண்டாவதாக, இவ்வாறு ஒருங்கிணைந்து நிற்கும் எதிர் அணி, சரியான திட்ட வரையறையை வாக்காளர்கள்முன் வைக்க வேண்டும். அனைவருக்கும் மருத்துவ வசதி, கடந்த இருபது ஆண்டுகளாக பணவீக்கத்தால் தேக்கநிலையிலிருக்கும் ஊதியங்களில் உண்மையான  உயர்வு போன்றவற்றை அளிப்போமெனத் துணிவாக, தீர்க்கமாக மக்களுக்கு உறுதி தர வேண்டும்.            
   உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஏழைகளுக்கு ஆதரவானதொரு அணியை உருவாக்கலாம். இதில் இஸ்லாமியர் மற்றும் தலித்துகளை மட்டுமல்லாமல்,  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் வறுமை நிலையில் உள்ளவர்களையும், மண்டல் அறிக்கையால் எவ்வித பலனும் அடையாதவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நிதிஷ்குமாரைப் போல மாயாவதி, ஜாதிகளுக்கப்பாற்பட்டு பெண்களைத் தன்பக்கம் கொண்டு வர முடியும். கல்வியை ஒரு மையப்புள்ளியாகக் கொண்டு, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பள்ளி செல்லும் பெண்களுக்கு அரசு நிதியில் கல்வி தர உறுதியளித்து அவர்களை மீட்டெடுக்கலாம்.             
   அகில இந்திய அளவில், வெகுமக்கள் நலன், சமத்துவம் மற்றும் பரவலான ஜனநாயகம் ஆகியவற்றைத் தளமாகக் கொண்ட திட்டத்தை இந்தியாவுக்கு ஏழை-ஆதரவு, மதச்சார்பற்ற கூட்டணி முன்வைக்க வேண்டும். இத்தகைய திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லவேண்டும்; .அதற்கான உரிமைகளும் வேண்டும். இதற்குத் தொழிற்சங்கங்களின் பரந்த விரிவாக்கமும் வலிமையான தொழிற்சங்க உரிமைகளும் தேவை.
   இந்தியாவின் தேசிய ஜீவியத்திற்காக ஏழைகளின் நுகர்வு சக்தியை நெறிப்பதன்மூலம் அவர்கள் மீது இன்னும் சுமையை அதிகரிப்பது, குறைவான ஊதியம், பரிதாப வாழ்க்கைச்சூழல், தொழிற்சங்க எதிர்ப்பு நிலை, சுற்றுச்சூழல் சீரழிவு போன்றவைதான் உலகப் பொருளாதாரத்துடன் இந்தியாவை ஒருங்கிணைக்குமென்று தவறாகப் பொருள் கொள்ளக் கூடாது.
  வருங்கால அரசுகள் பெரும் தொழில் நிறுவனங்களை சார்ந்து நிற்கத்தான் வேண்டுமென்ற நிலை நீடிக்கும்வரை, சர்வதேச அளவில் உலகப் பொருளாதாரத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளும் பெரும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதென்ற தொழில் கொள்கையை உருவாக்கிக் கொள்ளலாம்; அதே நேரம், பெட்ரோலியம் போன்ற எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், சட்டரீதியாகத் தொழிற்கூடம் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்திலும் வலுவான தொழிலாளர் அமைப்புகளை அனுமதிக்கவும் அவை நிர்ப்பந்திக்கப்படவேண்டும். தொழில் முனைவின் மற்ற தளங்களில், உள்ளூர் சந்தையை வளர்ப்பதில் உறுதிகொண்டுள்ள அரசாங்கம், 2006-ல் தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் மேற்கொள்ளப்பட்ட ‘பெருமளவிலான கிராமப்புற பொதுப்பணித் திட்ட விரிவாக்க’த்தின் ஆதர்சத்தில், சமூகத் தேவைகளைக் கணக்கில் கொண்ட பசுமைப் பொருளாதாரத்தை வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் இணைக்கிறவகையில் அரசு, தனியார் மற்றும் தொழிலாளர்களால் நிர்வகிக்கப்படுகிற நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும். 
  சுகாதாரம், வீட்டு வசதி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றில் முதலீடு செய்வது இந்தியாவிற்கு அவசியம். பணக்காரர்கள்மீது வரி போடுவதன்மூலம்தான் இதற்கான நிதி ஆதாரத்தைப் பெறமுடியும். (வேளாண்மை மற்றும் அமைப்பு சாரா தொழில்களையும் வரிக்குட்படுத்துதல் அவசியமாகும்). செலவினங்களுக்கான முன்னுரிமைகளை மாற்றியமைத்தலும் தேவை. ஊட்டச்சத்தின்மை பரவலாக உள்ளது; கல்வியின் நிலை பரிதாபமாகயிருக்கிறது; குழந்தைத் தொழிலாளர் முறை குறைந்தபாடில்லை; இந்தியாவின் மிகவும் பலவீனமான சமூகக் குழுக்கள் மீதான அரசின் கட்டுப்பாடற்ற வன்முறை தீவிரமாகத்தான் உள்ளது.
   வலுவான ஜனநாயகத்தை உறுதியாகச் செயல்படுத்த எண்ணும் எந்த புதிய அரசும் இனிமேல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவையும், வகுப்புவாத வன்முறை மசோதாவையும் காலம் தாழ்த்த முடியாது. எதிர்க் கட்சிகள் இவற்றையெல்லாம் பற்றி இப்பொழுதே சிந்தித்தால், 2019ல் இவர்களிடம் தெளிவான, உறுதியான ஒரு திட்டம் உருவாகியிருக்கும்.
COURTESY: THE HINDU
தமிழில்: பேராசிரியர் ரகு அந்தோணி 

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP