Sunday, December 19, 2010

முகத்திரை கிழிகிறது


"It's the establishment vs the web" -- John Naughton



"மேலை நாடுகளின் அரசியல் ஆளும் வர்க்கங்கள் குழப்புவார்கள்,

மூடிமறைப்பார்கள், பொய்யுரைப்பார்கள், - அவர்களது ரகசிய முகத்திரை

கிழியும்போது செய்தியை எடுத்துச் செல்லும் தூதரையே கொல்ல

முயல்வார்கள்..."

உலகம் முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட அமெரிக்கத் தூதரகங்கள், அமெரிக்க அரசாங்கத்துக்கு அனுப்பிய 2,51,287 ரகசியத் தந்திகளில் (கேபிள்கள்) அடங்கியுள்ள செய்திகளைக் கடந்த நவம்பர் 28-ஆம் தேதியில் இருந்து, 'விக்கிலீக்ஸ்' (WikiLeaks) புலனாய்வு இணையதளமும், அதனுடன் இணைந்து 'தி கார்டியன்', 'நியூயார்க் டைம்ஸ்', 'டெர் ஸ்பீகல்', 'லீ மாண்டே', 'எல் பைஸ்' ஆகிய உலகு தழுவிய 5 பெரும் நாளேடுகளும் நாள்தோறும் ரகசிய செய்திகள்21 நாட்களாகò தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. இது 'கேபிள்கேட்' என அழைக்கப்படுகிறது. அம்பலமாகி வரும் இந்த ரகசியத் தந்திகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகளின் ஆளும் வர்க்கங்களின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன.
அரசாங்கத்தின் பொய்களை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் வகையில் ரகசிய ஆவணங்கள் அம்பலமாவது இதுவே முதல் தடவை அல்ல. அதுபோல இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. ரகசியங்கள் அம்பலமாவதை தடுக்க ஆளும் வர்க்கங்கள் தாக்குதல் தொடுப்பதும் இதுவே முதல் முறையல்ல. அதுபோல, இதுவே கடைசி தடவையாகவும் இருக்கப் போவதில்லை. மக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்காக ரகசியத்
தகவல்களை ஆளும் வர்க்கங்கள் நெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகின்றன. சட்டவிரோதப் போர்களில் ஈடுபடுவதற்காக, மனித உரிமைகளை மீறுவதற்காக, மக்களைக் கொன்று குவிப்பதற்காக, பூமியை மாசுபடுத்துவதற்காக அரசாங்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் மக்களின் பெயரால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றன. இதற்காகப் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில், உண்மையை அறிந்து கொள்வது மக்களின் உரிமை. அந்த உரிமை இல்லாமல் ஜனநாயகம் நிலைத்துத் தழைக்க முடியாது. விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மீது இப்போது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல், ஜனநாயகத்தை வெறுக்கும் ஆளும் வர்க்கங்களின் நடவடிக்கைளுக்கு இன்னொரு உதாரணம்.

இத்தாக்குதலின் ஒரு பகுதியாக, விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும், அதன் அடிப்படையில் அவரை நாடு கடக்தி சுவீடனுக்குக் கொண்டு செல்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் எந்த நேரத்தில், எந்தப் பின்னணியில் எடுக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, அவை பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்படுகின்றன என்ற பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆரம்ப விசாரணைக்குப் பிறகு கைவிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இப்போது மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு 'அமேசான்' (Amazon) நிறுவனம் வழங்கி வந்த இணையச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 'பேபால்' (PayPal), 'விசா' (Visa), 'மாஸ்டர்கார்டு' (Mastercard) போன்ற பணப் பரிவர்த்தனை வழிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இணையதளப் பகுதியின் (domain) பெயர் மறுக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கியில் அதற்கு இருந்த வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இப்படி விக்கிலீக்ஸுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இந்தப் பின்ணியில்தான் ஜூலியன் அசாஞ்சின் கைது, பழிவாங்கும் நடவடிக்கை நடவடிக்கையே என்பது வெட்டவெளிச்சமாகிறது. விக்கிலீக்ஸுக்கு வாய்ப்பூட்டு போடும் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து உலகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்து வருகின்றன. அமெரிக்காவின் வலதுசாரி அரசியல்வாதிகள் விக்கிலீக்ஸைக் குறிவைத்துத் தாக்கிப் பேசி வருகின்றனர். ஜூலியன் அசாஞ்சைத் தீர்த்துக்கட்டவேண்டும் என்று கூட சிலர் கொக்கரித்து வருகின்றனர். அமெரிக்காவில் விக்கிலீக்ஸுக்கு எதிரான வன்முறை வெறிக்கூச்சல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சுக்கு ஆதரவாகத் தத்துவ அறிஞர் நோம் சாம்ஸ்கி, பத்திரிகையாளர், எழுத்தாளர், இயக்குநரான ஜான் பில்ஜர், மனித உரிமை ஆர்வலர் ஜெமிமா கான் போன்ற புகழ்பெற்றவர்களும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக, மனித உரிமை ஆர்வலர்களும் அணிதிரண்டுள்ளனர்.

கருத்து சுதந்திரத்துக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும், மெய்யான ஜனநாயகத்துக்கும், நீதிக்குமான இந்தப் போராட்டத்தில் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல் அனைவரும் செயல்துடிப்புடன் பங்கேற்க வேண்டியது காலத்தின் தேவை. எதிர்காலத்துக்கான ஜனநாயக ஊடகம், புதிய ஊடகம், மாற்று ஊடகம் என்று போற்றப்படும் இணையத்தின் எதிர்காலம் குறித்தும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை எடுத்துக்காட்டும் வகையில், "It's the establishment vs the web" என்னும் தலைப்பில், கார்டியன் பத்திரிகையில் ஜான் நாட்டன் (John Naughton) எழுதிய இந்தக் கட்டுரையை வெளியிடுவது காலப்பொருத்தம் உடையது என 'சஞ்சிகை' கருதுகிறது. 'இந்து' (THE HINDU) நாளிதழில், 2010 டிசம்பர் எட்டாம் நாள் இது வெளியானது.



ஆளும் வர்க்கத்துக்கும் இணையத்துக்கும் இடையிலான போர்


ஜான் நாட்டன்

''ஒரு முக்கியமான நெருக்கடியை ஒருபோதும் வீணடிக்கக் கூடாது'' என்பது அதிபர் தேர்தலின்போது ஒபாமா அணியின் முழக்கமாக இருந்தது. அந்த உணர்வின் அடிப்படையில் 'விக்கிலீக்ஸ்' அம்பலப்படுத்தி வரும் ரகசியங்கள் தொடர்பாக அரசாங்கங்கள் எடுத்துவரும் எதிர்நடவடிக்கைகளில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

நன்கு நிறுவப்பட்ட அரசு நிருவாகத்துக்கும் இணையக் கலாசாரத்துக்கும் இடையே முதன்முதலாக நடைபெறும் உண்மையான நீடித்த மோதலை இது பிரதிபலிக்கிறது என்பதுதான் மிகவும் கண்கூடான படிப்பினை. இதற்கு முன்பும் இந்த வகையில் பூசல்கள் இருந்திருக்கின்றன. ஆனால் இதுதான் உண்மையான ஒன்று.

முதலில் விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு இடமளிக்கும் இணையச் சேவை வழங்கும் அமைப்புகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து 'அமேசான்', 'இபே', 'பேபால்' போன்ற நிறுவனங்கள், தங்கள் விதிமுறைகளும் நிபந்தனைகளும் 'விக்கிலீக்ஸு'க்கு சேவைகள் வழங்குவதைத் தடுப்பதாகத் திடீரெனக் 'கண்டுபிடித்து' அறிவித்தன. அதன் பிறகு 'பேஸ்புக்' இணைய தளத்தில் உடனுக்குடன் விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டு வந்த கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களை அமெரிக்க அரசு மிரட்டத் தொடங்கியது. இதுவரையில் அழகிய பனிமூட்டத்தால் மூடி மறைக்கப்பட்டிருந்தசகிப்புத்தன்மையின்மை பழைய்ழ குருடி கதவைத்திறடி எனும் பாணியில் இப்போது தலைகாட்டத் தொடங்கியுள்ளது. அதனுடைய தீமைபயக்கும் தாக்குதல் விரிவாகத் திட்டமிடப்பட்டது. ஜனநாயகத்தின் மீதும், இணையத்தின் எதிர்காலம் குறித்தும் அக்கறை கொண்ட ஒவ்வொருவருக்கும் இதில் கடினமான படிப்பினைகள் அடங்கியுள்ளன.

வேடிக்கை முரண்பாடு

'தாராள ஜனநாயக' நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்தான் இப்போது 'விக்கிலீக்ஸ் இணைய தளத்தை மூட வேண்டும் எனக் கூக்குரலிடுகின்றன என்பதுதான் இதில் உள்ள வேடிக்கை முரண்பாடு.

உதாரணமாக, ஓராண்டுக்குள் அமெரிக்க அரசு நிருவாகத்தின் கருத்துக்கள்தான் எப்படி மாறிவிட்டன என்பதைப் பார்ப்போம். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடந்த ஜனவரி 21-ஆம் தேதி வாஷிங்டன் நகரில் இணையத்தின் சுதந்திரம் குறித்து ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை பலராலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அது 'கூகிள்' (Google)இணையச் சேவை நிறுவனம் மீது சைபர்தாக்குதல் (cyberattack) நடத்தியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான சீனாவுக்கு எதிரான கண்டனம் என்று பலரும் அதற்கு விளக்கம் அளித்தார்கள். ''தகவல் என்பது இதற்கு முன்பு ஒருபோதும் இந்த அளவுக்கு சுதந்திரமாக இருந்ததில்லை'' என்று ஹிலாரி கிளிண்டன் பிரகடனம் செய்தார். ''எதேச்சதிகார நாடுகளிலும் கூட, மக்கள் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்கும், அரசுகளை அதிகம் பொறுப்பேற்கச் செய்வதற்கும் தகவல் இணைய அமைப்புகள் உதவி வருகின்றன'' என்று அவர் முழங்கினார்.

கடந்த 2009 நவம்பரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சீனாவுக்குச் சென்றிருந்தபோது, ''தடையின்றி எளிதில் தகவல்களைப் பெறுவதற்கான மக்களின் உரிமையை அவர் ஆதரித்துப் பேசினார். எந்த அளவுக்கு சுதந்திரமாகத் தகவல்கள் பரவுகின்றனவோ அந்த அளவுக்கு சமுதாயங்கள் வலுவடையும் என்று சொன்னார். செயல்பாடுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவையாக அரசுகளை மாற்றுவதற்கு மக்களுக்கும், புதிய கருத்துக்கள் தோன்றுவதற்கும், படைப்பாற்றலுக்கு ஊக்கம் அளிப்பதற்கும் தகவல்களை எளிதில் பெறுதல் எந்த அளவுக்கு உதவி செய்கிறது" என்றெல்லாம் ஒபாமா பேசியதை ஹிலாரி கிளிண்டன் தனது பேச்சில் சுட்டிக் காட்டியிருந்தார். இப்போது நடப்பதை நாம் பார்க்கும்போது, ஹிலாரி கிளிண்டனின் பேச்சு ஒரு தலைசிறந்த நகைச்சுவையைப் படிப்பது போல இருக்கிறது.

ரகசியங்கள் வெளியாவது குறித்த அதிகார வர்க்கத்தின் வெறிக்கூச்சல், மேற்கத்திய ஜனநாயகங்களில் அரசியல் மேட்டுக் குடியினர் அவர்களது வாக்காளர்களை எந்த அளவுக்கு ஏமாற்றி வருகின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது.

சூட்சமம்தான் என்ன?

அமெரிக்க - ஆங்கிலேய - ஐரோப்பிய சாகசம் ஆப்கானில்தானில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை மட்டுமின்றி, மிக முக்கியமாக, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற வட அட்லாண்டிக் ஒப்பந்த (நேட்டோ) நாடுகளின் அரசுகள் அதைத் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்கின்றன என்பதையும் 'விக்கிலீக்ஸ்' வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

இந்த மடமைத்தனத்துக்கு நிதி வழங்கும் வரி செலுத்துவோரான வாக்காளர்களை அவர்கள் எதிர்கொள்ள முடியாது என்பதும், அந்த மக்களிடம் அவர்கள் இதைச் சொல்ல முடியாது என்பதும்தான் பிரச்சினை. இப்போது வெளியாகி இருக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதர் அனுப்பிய ரகசியத் தந்திச் செய்திகள், 1970-களில் அமெரிக்கா ஆதரித்து வந்த தென் வியத்நாம் அரசைப் போன்ற ஊழல் அரசாக, தகுதியற்ற அரசாக ஆப்கானிஸ்தானின் கர்சாய் அரசு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகின்றன. வியத்நாமில் எப்படி சிக்கிக் கொண்டிருந்ததோ அதே போல ஆப்கானில் அமெரிக்கா சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் அவை தெளிவாகக் காட்டுகின்றன.

ஆப்கானிஸ்தானை ஒரு செயல்படும் ஜனநாயகமாக மாற்றுவது ஒருபுறம் இருக்கட்டும், குறைந்தது அதை ஒரு தகுதியான அரசாக மாற்றுவதற்குக் கூட உண்மையில் வாய்ப்பு இல்லை என்பதை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் உணர்ந்துள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள ரகசியங்கள் காட்டுகின்றன. ஒலிகானா இருட்குகையில் அந்த நாடுகள் சிக்குண்டு கிடப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலபடுத்தியுள்ளது. ஆனால் இதை ஒப்புக் கொள்வதற்கு வாஷிங்டனிலும், லண்டனிலும், பிரஸ்ஸல்ஸிலும் உள்ள அரசியல் தலைமைகள் மறுக்கின்றன.

வியத்நாம் எப்படியோ அப்படி ஆப்கானிஸ்தானும் ஒரு புதை மணல்தான். கட்டாயப்படுத்தி ஆள் சேர்க்கப்படாத படைகளைக் கொண்டு இப்போது போர் நடத்தப்படுகிறது என்பதும், அப்பாவி மக்கள்மீது கண்மூடித்தனமாக குண்டு வீசுவதில்லை என்பதும்தான் இப்போது நடக்கும் போரில் ஒரே வேறுபாடு.

இணையச் சேவையினர் யார் பக்கம்?

இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் யார் பக்கம் இருக்கின்றன என்பது பற்றி விந்தையான கற்பனைகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் 'விக்கிலீக்ஸ்' மீதான தாக்குதல்கள் ஓர் எச்சரிக்கை அறிவிப்பாகும். இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் தங்கள் சர்வர்களில் உங்கள் விவரங்களை சேமித்து வைக்கிற அல்லது உங்கள் வலைப் பதிவுக்கு இடம் அளிக்கிற அல்லது இணையத்தில் எங்கோ ஓரிடத்தில் அமைந்துள்ள 'வர்ச்சுவல்' கம்ப்யூட்டர்களை நீங்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வதற்கு வகை செய்கிற 'கூகிள்', 'பிளிக்கர்', 'பேஸ்புக்', 'மைஸ்பேஸ்', 'அமேசான்' போன்றவைதான் இந்த இணையச் சேவை நிறுவனங்கள். எந்த விதிமுறைகள், நிபந்தனைகளின் கீழ் இலவச சேவைகளையும், பணம் செலுத்தி பெறும் சேவைகளையும் வழங்குகின்றனவோ, அந்த விதிகளும் நிபந்தனைகளும் அவற்றின் நலனுக்கு அவசியம் என்றால் உங்களுக்கு வழங்கிவரும் சேவைகளை அவை கைவிடுவதற்கான காரணங்ளையும் அளிக்கின்றன. இணையச் சேவை நிறுவனங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள், ஒருநாள் அவை உங்கள் காலை வாரிவிடும் என்பதுதான் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நீதி.

நிலைமை சிக்கலான உடனே தனது சேவையில் இருந்து விக்கிலீக்ஸை கழற்றிவிட்ட அமேசான் நிறுவனத்தைப் பாருங்கள். இந்த விஷயத்தில் ஆணவம் தலைக்கேறித் திரியும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர் ஜோ லீபர்மேன் அமேசான் நிறுவனத்துக்கு நெருக்குதலும் தொல்லையும் கொடுத்ததாகத் தோன்றுகிறது. ''விக்கிலீக்ஸுடன் அதன் உறவு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அமேசான் நிறுவனத்தைக் கேட்கப் போவதாகவும், களவாடப்பட்ட ரகசியத் தகவல்களை வெளியிடுவதற்கு அவற்றின் சர்வர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் அமேசானும் பிற இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களும் என்ன செய்யப் போகின்றன என்று கேட்க இருப்பதாகவும்'' ஜோ லீபர்மேன் பின்னர் அறிவித்தார். அப்படியென்றால், ''ஒரு ரகசிய தகவல் செய்தியை வெளியிடுவதற்கு நாங்கள் ஏற்பாடுகளைச் செய்யும்போது, 'நியூயார்க்கர்' பத்திரிகையை அச்சிடும் அச்சகத்தை நடத்தும் நிறுவனத்தை அவரோ, வேறு செனட் உறுப்பினர்களொ தொலைபேசியில் அழைத்து, அதை வெளியிடாமல் எங்களைத் தடுத்து நிறுத்தும்படி அந்த நிறுவனத்திடம் சொல்ல முடியும் என்று லீபர்மேன் கருதுகிறாரா?'' என்று 'நியூயார்க்கர்' பத்திரிகையின் ஆமி டேவிட்சன் அண்மையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேற்கத்திய ஜனநாயக அமைப்பு எந்த அளவுக்கு ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் உண்மையிலேயே அம்பலப்படுத்தி இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மேற்கத்திய அரசியல் மேட்டுக் குடியினர் (அயர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வங்கிகளை முறைப்படுத்தாமல்) செயல்திறமை அற்றவர்களாக, (ஆயுத வணிகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து அரசுகளும்) ஊழல் மலிந்தவர்களாக, (இராக்கில் அமெரிக்காவும், இங்கிலாந்தும்) போர்வெறி பிடித்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை இவை காட்டுகின்றன. இருந்தும்‌, எந்த வகையிலும் அவர்கள் எங்கேயும் விசாரணைக்கு அழைக்கப்பட்டதில்லை. மாறாக, குழப்புவதிலும், பொய்யுரைப்பதிலும, மூடி மறைப்பதிலும்‌ ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கடைசியில் ரகசியமெனும் முகத்திரை அகற்றப்படுகிறபோது, அவர்களுடைய எதிர்நடவடிக்கை என்பது செய்தியை எடுத்துச் செல்லும் தூதுவரையே கொல்லும் கொடுஞ்செயலாக இருக்கிறது.

ரகசியங்கள் வெளியாவது குளறுபடியானதாகவும், தார்மிக, சட்ட எல்லைக்கோடுகளைச் சோதிப்பதாகவும் இருக்கும். பெரும்பாலும் அது பொறுப்பற்றதாகவும், பொதுவாக இக்கட்டான நிலையை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால் முறைப்படுத்துவற்கு எதுவும் செய்யாதபோது, அரசியல்வாதிகள் அஞ்சுகிறபோது, வழக்கறிஞர்கள் வாய்மூடிக் கிடக்குமபோது, தணிக்கைமுறை கறை‌பட்டிருக்கும்போது--எஞ்சியிருப்பது எல்லாம் இதுதான் என்று 'கார்டியன்' ஏட்டில் சைமன் ஜென்கின்ஸ் அண்மையில் எழுதி இருந்தார். நமது ஜனநாயக அரசுகளின் அதிகாரவர்க்க நடவடிக்கையானது, இணையம் என்கிற கூறிய வாளால் ஆடைகள் கிழித்தெறியப்பட்ட கொடுங்கோல் சக்ரவர்த்திகளின் ஆங்காரக் குரலாத்தான் ஒலிக்கிறது.

இது நம்மை இந்த சர்ச்சையின் மிகப் பெரிய முக்கியத்துவத்தின்பால் இழுத்து வருகிறது. இணையம் என்பது எதேச்சதிகார ஆட்சிகளுக்கு மட்டுமின்றி தங்களுக்கும் கூட முள்ளாகத் தைக்கிறது என்பதை மேலைய ஜனநாயகங்களின்அரசியல் மேட்டுக்குடியினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களும் அவர்களது அதிகார அமைப்புகளும், அரைகுறை பார்வைகொண்ட, பைத்தியம் பிடித்த அரக்கர்கள், ஒரு உளவாளியைத் தாக்கி அழிக்க முற்படுவதுபோல இணையத்தை மிதித்து நசுக்குவதற்கு முயல்வதைப்பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அஞ்சி நடுங்கி அவர்கள் எண்ணத்துக்கு வளைந்து கொடுப்பதைப் பார்க்கும்போது ஆழந்த கவலை ஏற்படுகிறது. இதுவரையில் இதில் 'டுவிட்டர்' இணைய தளம் மட்டும்தான் விதிவிலக்காக இருக்கிறது.

ஆனால் அரசியல்வாதிகள் இப்போது எந்த நிலையை மேற்கொள்வது என்ற இக்கட்டான தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளனர். உளவாளிகளுக்கு எதிரான பழைய அணுகுமுறை இப்போது பயனளிக்காது. விக்கிலீக்ஸ் இணையதளம் இணையத் தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி இருக்கவில்லை. அந்த ரகசியத் தந்திகளின் - அதற்கு மேலும் வேறு இருக்கலாம் - ஆயிரக்கணக்கான பிரதிகள் பிட்டாரன்ட் (Bittorrent) போன்ற தொழில்நுட்பங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. நமது ஆட்சியாளர்களுக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரகசியங்களை அம்பலப்படுத்தும் விக்கிலீக்ஸ் போன்ற இணைய தளங்கள் செயலாற்றும் உலகில் அவர்கள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது இணையத்தையே அவர்கள் மூடிவிட வேண்டும். இதில் அவர்கள் எதைச் செய்யப்போகிறார்கள் என்பது அவர்கள் கையில்!

தமிழில்: ஜெயநடராஜன்

Cartoon: Courtesy THE HINDU (08-12-2010)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP