Wednesday, December 8, 2010

11th INTERNATIONAL COMMUNIST MEET, NEW DELHI

சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின்
புதுடெல்லி மாநாடு:
எனது மனப்பதிவுகளும்,
ஆலோசனைகளும்
சதுரானன் மிஷ்ரா



[இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் சதுரானன் மிஷ்ரா. 1996 முதல் 1998வரை மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணி அரசில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக விவசாய அமைச்சர் பொறுப்பு வகித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அகில இந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) தலைவராகவும் விளங்கியவர். புது டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு குறித்து 'மெயின்ஸ்ட்ரீம்' வார ஏட்டில் (5.12.2009) அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அப்படியே தரப்படுகிறது.]



ம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு 2009-ஆம் ஆண்டு நவம்பர் 20-22 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்றது. மாநாட்டின் முடிவில் டெல்லி மாவ்லங்கர் அரங்கில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு அளிக்கப்படும் மக்களின் வரவேற்பாக அது வடிவெடுத்தது. அந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" என்னும் முழக்கம் திரும்பத்திரும்ப எழுப்பப்பட்டது. இதைக் கவனித்துக் கொண்டிருந்த நான், எனது இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி நண்பர்களிடம், "....ஆனால் இந்தியத் தொழிலாளர்கள் மட்டும் பிளவுபட்டே இருக்கவேண்டுமோ!" என அங்கலாய்த்தேன்.

உலகளாவிய இயக்கம்

இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியை எதிர்த்து முறியடிக்க உலகுதழுவிய இயக்கம் நடத்துவதற்கு இந்த சர்வதேச மாநாடு எந்த அறைகூவலையும் விடுக்கவில்லை. உண்மையில், பொருளாதார நெருக்கடி ஆரம்பமானவுடனேயே இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்க வேண்டும். மாநாட்டின் இறுதியில் மண்டபத்தில் கூட்டம் நடத்தியதற்குபதிலாக மாபெரும் மக்கள் பேரணியை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், அது, நமது மக்களையும், உலகப்பிரதிநிதிகளையும் உத்வேகப்படுத்தியிருக்கும். கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இத்தகைய சர்வதேச மாநாடு முதன்முறையாக இந்தியாவில் நடைபெறுவதால் இது அவசியமாகிறது.

பொதுக்கூட்டமாகவும், மக்களின் வரவேற்பாகவும் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், சர்வதேச மாநாட்டின் முடிவுகள் சம்பந்தமான முக்கிய அம்சங்களை அறிவார்ந்த இந்தியத் தோழர் ஒருவர் எடுத்துரைத்தார். பிறந்த சிசுவானது எவ்வாறு மீண்டும் கருவறைக்குள் நுழையமுடியாதோ அதைப் போலவே 1917 ரஷ்யாவில் நிகழ்ந்த புரட்சியில் ஜனித்த சோஷலிசமானது எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் ஜீவித்திருக்கும் என்றும், முதலாளித்துவ நெருக்கடிக்கு சோஷலிசம்தான் ஒரே தீர்வு என்றும் முழங்கினார். ஆனால், எழுபதுவயதையும் தாண்டிய சோஷலிசக் குழந்தையானது முதலாளித்துவக் கருவறைக்குள் ஏற்கனவே புகுந்துகொண்டது என்பதை அந்தத் தோழர் மறந்துவிட்டார் போலும்!

உலகமுழுவதிலும் சோஷலிசப் பேரரணாக விளங்கிய சோவியத் யூனியனின் வீழ்ச்சியால் சோஷலிசத்தின்பால் ஏற்பட்ட பெரும் அவநம்பிக்கையையும், ஆர்வமின்மையையும் இந்த சர்வதேச மாநாட்டின் முடிவுகள் போக்கத் தவறிவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.


சோஷலிசம் யாருக்கு?

இருபதாம் நூற்றாண்டு முழுவதுமே தனக்குச் சாதகமாக இருந்தபோதிலும், எந்த ஒரு நாட்டிலும் ஆட்சியை நடத்திச் செல்லும் அரசியல் ரீதியான ஆற்றலைத் தொழிலாளிவர்க்கம் பெற்றிருக்கவில்லை என்பதால், அந்த வர்க்கத்தை மட்டுமல்லாது,பொதுவான மக்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் சோஷலிசம் என்பதற்குத் தகுந்த மறுவரையறுப்பு தேவைப்படுகிறது. சோவியத் யூனியனிலும்கூடத் தொழிலாளிவர்க்கத்தின் தொழிற்சாலைகளை முதலாளிகள் கைப்பற்றி எடுத்துக்கொண்டபோது தொழிலாளர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டுதானே நின்றனர்?

சோஷலிசத்திற்கான புதிய வரையறுப்புகுறித்து நாம் யோசிக்கும் வேளையில், இன்றைய செக் நாட்டின் குடியரசுத்தலைவரும், 'ஊதா புரட்சி'யின் நாயகரும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளருமான வாக்லேவ் ஹாவல், "நியூஸ்வீக்" வார ஏட்டின் 2009 செப்டம்பர் 9-ஆம் தேதிய இதழில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

"நியூஸ்வீக்" நிருபர்: பெர்லின் சுவர் தகர்ந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதிலும், கிழக்கு ஐரோப்பா முழுவதும் முந்தைய சோவியத் ஆட்சிக்காலம் பற்றிய நினைவுகள் மேலோங்கி நிற்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஹாவல்: அந்தக்காலத்தில்தான் இன்றைய பெரியவர்கள் முதன் முதலில் தம் வாழ்வில் மகிழ்ச்சியைக் கண்டார்கள்; அதுவே இன்றைய அவர்தம் நினைவுகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்கிறது. இந்த நினைவலைகள் நிலைகொண்டிருப்பதற்கு நியாயமான காரணங்களும் உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு தனிநபரின் நல்வாழ்விலும் கம்யூனிஸ்டுகள் எடுத்துக்கொண்ட அக்கரைதான் அது. இன்று அதுபோன்ற அக்கரை [முதலாளித்துவத்தின் கீழ்] மறைந்து மண்ணாகிப்போனது.

ஹாவலின் கூற்று உணர்த்துவதென்ன? சோஷலிசம் ஒவ்வொரு குடிமகனின் நலனையும் காத்து நிற்கிறது என்பதைத்தானே? எனவே, (தொழிலாளிவர்க்கம் மட்டுமல்லாது) அனைத்து பிரஜைகளும் இதனை உணர்ந்து ஏற்கச்செய்து, சோஷலிசத்திற்கு அணிதிரளச்செய்ய வேண்டும். இத்தகைய அணுகுமுறை இன்றைய காலத்தின் தேவை.

'சர்வாம்ச வளர்ச்சி' எனச்சொல்லப்படுகிற அம்சம் உத்திரவாதப்படுத்தப்படவேண்டும் என்கிற கருத்து உலகம் முழுவதும் வலுத்துவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்டிக்லிட்ஸ் கமிட்டி(Stiglitz Committee) யும் சர்வாம்ச வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது. நமது திட்டக்குழுவும் இந்தக் கருத்தையே ஆதரிக்கிறது. எனவே, கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு தனி நபரின் நலனையும் காத்துநிற்கிற அமைப்பு முறைமைக்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டிய கடமையும், அத்தகைய முறைமையை ஏற்குமாறு அரசை நிர்ப்பந்திக்க மக்களைத் திரட்டவேண்டிய பொறுப்பும் நமக்குள்ளது.


ஜனநாயக வழி

இந்த சர்வதேச மாநாடு கவனம் செலுத்தியிருக்கவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் ஜனநாயகம் சம்பந்தமானதாகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது போல, (எதிர்க்கட்சிகளை அமைப்பதற்கான உரிமை, அரசியல் அரங்கில் எதிர்க்கட்சிகள் இயங்குவதற்கான உரிமை, ஊடகச் சுதந்திர உரிமை, சுதந்திரமான நீதித்துறைக்கான உரிமை உள்ளிட்ட) ஜனநாயகத்தை இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் ஏற்கிறோம் எனப் பிரகடனப் படுத்தியிருக்க வேண்டும்.வெகுஜன அமைப்புகள், கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கமாட்டா என்கிற தெளிவான புரிதலுடன் மக்களைக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்ப்பதற்கு இத்தகைய பிரகடனம் வழிவகுத்திருக்கும்.

சீனத்தின் நிலைபாடு

சோவியத் யூனியன் இருந்த காலத்தில், தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உலகுதழுவிய இயக்கத்தைக் கட்டி வளர்க்க அரும்பாடுபட்டதைப் போல இன்று சீனத் தொழிற்சங்கங்களும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்பட வில்லை என்பதை இந்த மாநாடு சுட்டிக்காட்டத் தவறிவிட்டது. பாரக் ஒபாமா, ஹூ ஜின்டோ ஆகியோருக்கு இடையே அண்மையில் நடைபெற்ற சந்திப்பு அமெரிக்கா சீனத்தை நெருங்குவதற்கு வழிகோலியுள்ளது. அமெரிக்காவின் காப்புப்பத்திரங்களைப் பெருமளவில் வாங்கிவைத்துள்ளதன்மூலம் உலக நாணயப் பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் மீண்டும் வலுப்பெற சீனா உதவியுள்ளது. அமெரிக்கா இன்று சீனத்தின் மிகப்பெரிய கடனாளியாகியுள்ளது. இந்த அம்சத்தின் பரிமாணங்கள்குறித்து சர்வதேச மாநாடு விவாதிக்கவில்லை. இந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில், இந்தியாவைக்காட்டிலும் பாகிஸ்தானும் சீனாவும்தான் அமெரிக்காவுக்குத் தேவைப் படுகிறது என்பதுதான் உண்மை. "ஆப்கனிஸ்தானில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பது, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்து, பாகிஸ்தானின் எதிர்வினைச் செயல்களுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிடும்" என்று ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ கமாண்டர் கூறியதை நாம் அலட்சியப் படுத்திவிடலாகாது.

அதேபோல, ஆப்கனிஸ்தானில் தலிபான் வெற்றி பெற்றுவிடின் அல்லது அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டபின், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் மற்றும் தலிபான் ஆகியவை கைகோர்த்துக் கொண்டு காஷ்மீரத்தைத் தாக்கும்பட்சத்தில் அது இந்தியாவுக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துவிடும்.


கிளிப்பிள்ளைகளா நாம்?

முதலாளிகள், தம்மைக் காத்துக்கொள்ள இறுதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்குமுன்னால், தாம் எடுத்துவைக்க இருக்கும் அடியை மீண்டும் மீண்டும் ஆழமாகச் சிந்தித்து முடிவெடுப்பார்கள்; ஆனால் கம்யூனிஸ்டுகளோ கிளிப்பிள்ளையப் போல பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பார்கள் என்று ஒருமுறை ஹென்றி கிசிங்கர் கூறினார்.

உலகக் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடுபற்றி எனது எண்ணங்களை எடுத்துரைக்கும்போது, சில ஆலோசனைகளையும் முன்வைக்கவே இந்தக் கட்டுரையை எழுதியுள்ளேன். இதுபற்றித் தவறாகப் பொருள்கொள்ளவோ, தவறாகப் புரிந்துகொள்ளவோ அல்லது வேறுவிதமாகவோ எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்று நம்புகிறேன்.

தமிழில்: மு.ப.
(MAINSTREAM, VOL XLVII, No 51, DECEMBER 5, 2009).



0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP