Sunday, December 12, 2010

இந்தியா உலகுக்கு அளிக்கிறது...



சுதந்திர பர்மாவின் தந்தை ஆங்க் சன் அவர்களின் தவப்புதல்வியும் பர்மாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவரும், 1989 முதல் 2010 வரையுள்ள 21 ஆண்டுக்காலத்தில், 15 வருடங்கள், வீட்டுச்சிறையில் முடக்கிவைக்கப்பட்டவருமான ஆங் சன் சூக்கி, கடந்த நவம்பர் 13-ல் விடுதலை செய்யப்பட்டார். காரக்கிருகவாசமும், ராணுவ ஆட்சியின் அடக்குமுறையும் அவரது மன உறுதியைக் குலைக்கவில்லை. அவர் நிறுவிய தேசிய ஜனநாயக லீக், 1990 பர்மிய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 59 சதவீத வாக்குகளையும், 81 சதவீத இடங்களையும் பெற்று வெற்றிவாகை சூடியபோதிலும், அது ஆட்சியை அமைக்க அனுமதிக்கவில்லை ராணுவ ஆதிக்க ஆளவந்தார்கள். இந்தியாவில், தனது பள்ளிக்கல்விக் காலம் முதலே நம் நாட்டுடன் தொடர்பு கொண்டிருந்த சூக்கி அவர்கள், பாரதத்திருநாட்டின் மீது தனி மதிப்பும் மரியாதையும் கொண்டவர். தியாக வேள்வியில் புடம்போட்டெடுக்கப்பட்ட அந்த 65-வயது வீராங்கனையைத் தேடிவந்த விருதுகளும், சிறப்புகளும் ஏராளம். 1993-ஆம் ஆண்டு, சர்வதேசப் புரிந்துணர்வுக்கான நேரு விருது அவருக்கு அளித்து கவுரவித்தது இந்தியா. விருதினை ஏற்று சூக்கி ஆற்றிய உரையின் தமிழாக்கம் இதோ:






குடியரசுத் தலைவர் அவர்களே, குடியரசுத் துணைத் தலைவர் அவர்களே, பிரதமர் அவர்களே, மாட்சிமைமிகு தூதர்களே,நேரு விருதுக் கமிட்டியின் உறுப்பினர்களே, மரியாதைக்குரிய விருந்தினர்களே, அன்பு நண்பர்களே!




எண்ணக் கலவைகள் பிரவகிக்கும் நிகழ்ச்சி இது. உறுதியான நட்புறவுகள், மனமொத்த அரசியல் லட்சியங்கள், எண்ணற்ற இந்திய மக்களுடன் என்னைக் கட்டிப்போட்டுவிடுகின்றன. இந்தியாவைப் பற்றியோ, "பண்டிட்ஜி" என்று எப்போதுமே எங்கள் குடும்பத்தில் குறிப்பிடுவோமே அந்த பண்டிட் நேரு அவர்களையோ நான் அறிந்திராத காலம் எதுவும் என் நினைவில் இல்லை. சர்வதேசப் புரிந்துணர்வுக்காக அவர் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விருது வழங்கப்படுவது எனக்கு மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.




அதே நேரத்தில், தனிநபருக்காக வழங்கப்படுவதாக இல்லாமல், பர்மிய ஜனநாயக இயக்கத்தின் பிரதிநிதி என்கிற வகையில்தான் இந்த விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளேன். உலகமுழுவதிலும் மனித கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக அளப்பரிய பணியற்றியமைக்காக வழங்கப்படும் விருதுகளுக்காக நான் தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் ஏற்படுவதைப்போலவே இப்போதும் பணிவும் நன்றியுணர்வும் என்னை ஆட்கொள்கின்றன. எங்கள் நாட்டின் மக்கள் பாதுகாப்பாகவும் கவுரவத்துடனும் வாழவேண்டும் என்பதை உத்திரவாதப்படுத்துகின்ற கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் உரிமைகளுக்காகத் தினம் தினம் தங்கள் உயிரையே பணயம் வைத்துச் செயல்படும் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் எனது சொந்த நாட்டில் உள்ளனர்; அவர்களுக்கு எந்தவிதமான சர்வதேச அங்கீகாரமென்கிற பாதுகாப்பும் இல்லாமலேயே இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அந்த வீரர்கள், வீீராங்கனைகளின் போராட்டத்தை நினைவுகூர்வதற்கும், அவர்களின் பெயரால் நேரு நினைவுப் பரிசைப் பணிவுடன் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்புக்கு நன்றி.




சுதந்திர, ஜனநாயகபூர்வமான நாடாக பர்மா மலர்வதற்கு அளப்பரிய தியாகம் புரிந்தவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுவதற்கும், இந்தியாவுடன் எனது உறவுகளைப் புதிப்பித்து நேர் செய்வதற்கும்--சூழ்நிலை அனுமதிக்கும்பட்சத்தில் நேரில் வந்து விருதினைப் பெற்றுக்கொள்ளவே விழைந்தேன். ஆனால் அது வாய்க்காததால், ஐக்கிய நாடுகள் சபையில் முதல் பர்மிய உறுப்பினர் என்னும் பெருமைக்குரியவரும், சர்வதேசப் புரிந்துணர்வு தேவை என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்துவருபவருமான எமது அன்புக்குரிய குடும்ப நண்பர், அத்தையென எங்களால் போற்றப்படுபவரை எனது பிரதிநிதியாக இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளத் தேர்வு செய்துள்ளேன். இந்த நிகழ்ச்சியின் மகத்துவம், கவுரவத்துக்கேற்ப எனது சார்பில் விருதினை அவர் ஏற்பார்.




சர்வதேசப் புரிந்துணர்வுக்காக நேரு ஆற்றிய பங்களிப்பு, வேறுபட்ட கலாசாரங்கள், மாறுபட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றுக்கு நடுவிலான இடைவெளியைக் குறைப்பதற்காக உலக அரங்கில் தன் வாழ்நாளில் செய்த அரும்பணிகளையும் கடந்து செல்கிறது. பொருளாயத சக்தியின்பால் மென்மேலும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் இந்த உலகில் அனைவருக்கும் மனிதப்பண்புகளை உரித்தாக்கும்பொருட்டு போராடும் மக்களை நாடிச்செல்வதற்கு அவரது ஆன்மா வழிகாட்டும்.



எனது காரக்கிருகவாசத்தின்போது, மகாத்மா காந்தி, பண்டிட் நேரு ஆகியோரின் மணிவாசகங்களும், எழுத்துக்களும் எப்போதும் உத்வேகமும் ஆதரவும் அளிக்கிற ஊற்றுக்கண்களாகத் திகழ்ந்தன. எனது மரியாதைக்குரிய வழிகாட்டிகள், ஆசான்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இந்த இரு மகத்தான இந்தியர்களும் உண்டு.



வெளியுலகத்துடன் எனது தொடர்புகள் துண்டிக்கப்பட்ட ஆறாண்டுக்காலம் முழுவதிலும் எனது வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு காகிதச் சுருளைத் தொங்கவிட்டிருந்தேன். பண்டிட்ஜி அவர்களின் சுயசரிதையிலிருந்து காலத்தால் அழியாத அவரது வார்த்தைகளை அதில் எழுதிவைத்திருந்தேன். எனது மனதில் பதிந்துவிட்ட அந்தப் பகுதியை அப்படியே இங்கே தருகிறேன்:




"சட்டமும் ஒழுங்கும், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் பெருமைக்குரிய சாதனைகளில் ஒன்று என நமக்குச் சொல்லப்பட்டது. இயல்பாகவே சட்டம் ஒழுங்கை முழுமையாக ஆதரிக்கும் தன்மை கொண்டவன் நான். வாழ்வில் கட்டுப்பாட்டை விரும்பும் நான், அராஜகம், ஒழுங்கின்மை, செயல்திறன் இல்லாமை ஆகியவற்றை விரும்புவதில்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அரசுகள் மற்றும் அரசாங்கங்கள் மக்கள்மீது திணிக்கின்ற சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் மதிப்பு குறித்து சந்தேகம் கொள்ள வைத்தன. சிலசமயம் அதற்காக நாம் கொடுக்கின்ற விலையோ மிக அதிகம். அதாவது, சட்டம் என்று சொல்லப்படுவது ஆதிக்கப் பிரிவின் விருப்பத்தையும், ஒழுங்கு என்பது சர்வவியாபகமான அச்ச உணர்வையும் பிரதிபலிப்பதாக ஆகிவிடுகிறது. சொல்லப்போனால், சில சமயம் இத்தகைய சட்டம் ஒழுங்கு என்று சொல்லப்படும் நிலைமையை, சட்டம் ஒழுங்கின்மை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். எங்கும் நிறை அச்சத்தின் அடிப்படையில் சாதிக்கப்படும் எதுவும் விரும்பத்தக்கதாக இருக்காது. அரசு நிர்ப்பந்தத்தின் மூலமாக அல்லது அதுபோன்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் தாக்குப்பிடிக்காது என்னும் ரீதியில் ஏற்படுத்தப்படும் ஒழுங்கு, ராணுவ ஆட்சியைப்போன்றதாக இருக்குமேயல்லாமல், மக்களின் ஆட்சியாக இருக்காது. கவிஞர் கல்ஹனாவின் ஆயிரம் ஆண்டு பழைமைவாந்த காஷ்மீரத்துக் காவியமான ராஜதரங்கிணியில், சட்டம் ஒழுங்கைக் குறிக்கும் வகையில் ஒரு சொற்றொடர் மீண்டும் மீண்டும் இடம்பெறுகிறது. தர்மம், அ-பயம்--அதாவது நேர்மையையும் பயமின்மையையும் பேணிக்காப்பது அரசனின், ஆட்சியின் கடைமை என்று அது கூறுகிறது. சட்டம் என்பது வெறுமனே சட்டதிட்டங்களைக் குறிப்பிடுவதாக அல்லாமல், மேலும் பொருள் பொதிந்ததாக உள்ளது ; ஒழுங்கு என்பது மக்களின் அச்சமின்மையே. அச்சம் கொண்டு கலங்கிப்போயிருக்கும் மக்களின்மீது 'ஒழுங்கை'த் திணிப்பதைக்காட்டிலும், அச்சமின்மையை மக்களின் மனதில் இருத்தச்செய்வது எவ்வளவு விரும்பத்தக்க விஷயம்!"




மேலே குறிப்பிடப்பட்டுள்ள பத்தியில் பண்டிட் நேரு அவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகள் என் மனத்திலும் நிறைந்துள்ளன. பல விஷயங்களில் நாங்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறேன்; எனது அன்னையுடன் இந்தியாவில் நான் இருந்த காலத்தில், அவரை நன்கு அறிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே என்பதை நினைத்து வருந்துவதுண்டு. அந்த காலகட்டத்தில், எனது பெற்றோரின் நண்பராகத்தான் அவரைப் பார்த்தேனேதவிர, எனது நண்பராகவே அவரைக் கருதிப் பார்க்கும் காலம் ஒருநாள் வரும் என்று கற்பனைசெய்துகூடப் பார்க்கவேயில்லை.




இத்தகைய ஆழ்ந்த மனிதநேயத்தின்மூலம்தான் பண்டிட் நேரு அவர்கள், பலமுறை இனம், தலைமுறை என்னும் தடைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி உயர்ந்து நின்றார். பர்மாவின் சுதந்திரம்குறித்த பேச்சுவார்த்தைக்காக லண்டன் செல்லும் வழியில், பண்டிட் நேருவையும் இதர இந்தியத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதற்காக டெல்லிக்கு வந்தார் என் தந்தை. தன்னைக்காட்டிலும் இருபத்தாறு வயது இளையவரான அவரிடம், ஒரு தந்தையைப் போன்ற பரிவைக்காட்டினார் பண்டிட்ஜி. மோசமான நிலையில் இருந்த அந்த இளைஞரின் பருத்தி யூனிஃபார்ம் மீது அவரது விமர்சனபூர்வமான ஆனால் கரிசனமான பார்வை விழுந்தது; அந்த ஆடை அவருக்குச் சரிவராது என்ற முடிவுக்கு வந்தார். அவர், தனது தையற்கலைஞர்களை வரவழைத்து, பல நேர்த்தியான, குளிருக்கேற்ற கம்பளி யூனிஃபார்ம்களை துரிதகதியில் தைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்தார். இங்கிலாந்து, என்றைக்கும் இல்லாத அளவு மோசமான பனிக்காலத்தில் உழல்வதுகுறித்துக் கேள்விப்பட்ட பண்டிட்ஜி, ஒரு பெரிய 'கோட்'டையும் வரவழைத்தார். அளவு மிகவும் பெரிதான அந்த 'கோட்டு'க்குள் எனது தந்தை தத்தளிப்பதுபோன்ற பிரசித்திபெற்ற புகைப்படமொன்று உண்டு.




1960-ல் எனது தாய் இந்தியாவுக்கான பர்மாவின் தூதுவராக நியமிக்கப்பட்டபோது, ஆழ்ந்த நட்புறவின்மூலம் பாதுகாப்பளித்தவர் பண்டிட் நேரு அவர்கள்; பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சமயங்களில், அவரிடம் குறிப்பாக நலம் விசாரித்துக் கொள்வார். அதுபோன்ற சீரிய மனிதத்தன்மையின்மூலம்தான் எல்லா இனங்கள்,மதங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களையும் வென்றார் பண்டிட் நேரு. ஜனநாயகம் மற்றும் சர்வதேசியம்குறித்த அவரது கொள்கைபூர்வமான ஆதரவு நிலைகளை ஏற்காதவர்கள்கூட, அவரது ஞானத்தையும் நேர்மையையும் மதிக்கலாயினர்.




முறையற்ற நமது உலகைச் சுற்றிச் சூழ்ந்துள்ள எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஜனநாயகபூர்வமான அரசியல் அமைப்புதான் சிறந்த தீர்வை அளிக்கிறது என்பதில் நம்பிக்கைகொண்ட நம்மைப்போன்றவர்களுக்கு பண்டிட் நேருவின், இந்தியாவின் சாதனைகள் வலிமைமிகு உத்வேகமளிக்கின்றன. பல இனங்கள், மொழிகள், மதநம்பிக்கைகள் நிலவுகின்ற இந்தத்துணைக்கண்டம்தான், பயங்கரமான வகுப்புவாதக் கலவரங்கள், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றின் தாக்குதலால் சீரழிக்கப்பட்ட சில மாதங்களிலேயே கம்பீரமாய் மீண்டும் எழுந்துநின்று புதிய எதிர்காலத்தை வசப்படுத்த முன்னோக்கி நடைபோடத்தொடங்கிய இந்தத் தேசம்தான், உலகின் இந்த மாபெரும் ஜனநாயக நாடுதான், மனிதனின் உள்ளார்ந்த கண்ணியத்தை மதிக்கின்ற, சுதந்திரம் மற்றும் சுய ஆட்சிக்குத் தகுதியானவனாக மனிதனை கவுரவப்படுத்துகின்ற ஆட்சிமுறையால் கட்டுக்குள் கொண்டுவரமுடியாத பிரச்சனையென்று எதுவுமில்லை என்பதை நிரூபிக்கத் தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. எங்கள் நாடும்கூட மக்களின் விருப்பத்தால் வழிநடத்தப்படுகின்ற, தர்மத்தாலும், அ-பயத்தாலும் ஆளப்படுகின்ற ஜனநாயக நாடாக மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது மிகப்பெரும்பாலான பர்மிய மக்களின் நெஞ்சார்ந்த நம்பிக்கையாகும்.




பொது எல்லைப்பகுதிக்கும் அப்பால், இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் இடையே பொதுவான விஷயங்கள் பலவுண்டு. பர்மிய கலாசாரத்தின் முதுகெலும்பான புத்தமதம், இந்திய மண்ணில் முகிழ்த்ததாகும். நமது யுகத்தின் அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினால் சிறுத்தும் சிக்கலாகியும், ஆபத்துமிகுந்துபோயுமிருக்கிற உலகில், புத்தமதம் போதிக்கின்ற பண்புகளான சகிப்புத்தன்மை, நேசமிகு அன்பு, தயாளகுணம், சுயகட்டுப்பாடு ஆகியவை விலைமதிப்பற்றவை.




இந்தியா தனது மகத்தான தலைவர்களின் பாரம்பர்யத்தில் தொடர்ந்து பயணிக்கிறது. எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான தேசத்திடமிருந்து சர்வதேச புரிந்துணர்வுக்காக விருதொன்றினைப் பெறுவது கவுரவத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.




குடியரசுத் தலைவர் அவர்களே, நேரு விருதுக் கமிட்டியின் உறுப்பினர்களே, எனது நாட்டுக்கும், எனது மக்களுக்கும், எனக்கும் நீங்கள் செய்துள்ள கவுரவத்திற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.




நன்றி!




தமிழில்: விதுரன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP