Monday, December 6, 2010

கம்பம் பீர் முஹம்மது

தேசபக்த வேள்வியில் குதித்த போலீஸ்காரர்!

( 'பாடகராக போராளியாக மாறிய போலீஸ்காரர் ' என்னும் தலைப்பில் தீக்கதிர் நாளிதழில் ஜனவரி 24 , 2010 - இல் வெளிவந்த கட்டுரையின் மறுபிரசுரம் கீழே :)

“கலெக்டரும் கடவுளல்ல!
அடிமைப்போலீஸ்கான்ஸ்டபிள் எமனுமல்ல!
அல்லாஹ்! ரசூலுல்லாஹ்!
இத்தொல்லைகள் தொலைவது மெந்நாளோ?
இப்பொல்லாத பேய்க ளெல்லாம் இங்கிலாந்து போவதுமெந்நாளோ?”

போலீசை விமர்சித்தாலோ தாக்கிப் பேசினாலோ, பொதுவாக மக்களிடம் வரவேற்பு பெறும். ஏனெனில், போலீஸ் காரர்களின் அராஜகத்தைக் கண்டு மனம் நொந்திருக்கிற மக்கள் யாராவது எதிர்த்துக் குரல் கொடுக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்திருப்பார் கள்.இன்றைக்கே அந்த நிலைமை எனில், வெள்ளைக் காரர் ஆட்சி காலத்தில் எப்படி இருந்திருக்கும்? ‘இம்’ என்றால் சிறைவாசம் ‘ஏன்’ என்றால் வனவாசம் என்கிற அந்தக் கால கட்டத்தில் மக்கள் எப்படி வேதனையோடு இருந்திருப் பார்கள் என்று எண்ணிப்பார் க்க வேண்டும். எல்லாவற்றை யும்விட அன்றைக்கு இப்படி அதிகார வர்க்கத்தை தாக்கி கவிதை பாட சொல்லொண்ணா மன உறுதி வேண்டும். அத் தகைய மனஉறுதியும் விடுதலை போராட்ட லட்சிய வெறியும் இருந்த கம்பம் பீர் முகமது பாவலர் தான் இந்தப் பாடலை பாடினார்.

இதுபோல் அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் கம்பம் வட்டார மக்களை விடு தலைப் போரில் கிளர்ந்தெழச்செய்தது. 1888ம் ஆண்டு கம்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை கம்பத்திலும் உயர்கல்வியை திருச்சியிலும் பயின்றவர். பிச்சை இபுராகீம் புலவரிடம் தமிழும் கற்றார். விளையாட் டிலும் ஆர்வம் உள்ளவர். நல்ல உயரமும் சிறந்த உடற்கட்டும் உடையவர். கால்பந்தாட்ட வீரர். இவருடைய தோற்றமும் திறமையும் பிரிட்டிஷ் அதி காரியை ஈர்க்க, இவருக்கு சப் இன்ஸ் பெக்டர் வேலை கிடைத்தது.1920ம் ஆண்டு மதுரையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்ட ராக பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகள் களவாடப்பட்டுவிட்டன. இவர் தன்னுடைய கடும் உழைப் பால் குற்றவாளிகளை பிடித்துக் கூண்டிலேற்றியதுடன் நகைகளையும் எந்தச் சேதார மும் இல்லாமல் மீட்டு கோயிலில் ஒப்படைத்து மதுரை மக்களின் அன்புக்குரியவரானார்.

அரசு உத்தியோகம் என் பது மேலதிகாரிகளின் மெட் டுக்கு நடனமாடுகிற போலி வாழ்க்கை என்பதை தன் அனு பவத்தில் உணர்ந்தார். காவல் துறை வேலை அவருக்கு கசந்தது. 1923ம் ஆண்டு ஒருவழி யாக போலீஸ் வேலையை உதறி விட்டு சிவகங்கை ஜமீனில் உதவி தாசில்தாராக பொறுப் பேற்றார். அதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. விடுதலை போராட்டமே ஈர்த்தது.

இவர் பணியில் இருக்கும் போதே எழுதிய ‘முத்தண்ணா’ என்ற நாவலில் தன்னையே கதாபாத்திரமாக்கி இந்த சம் பவங்களையெல்லாம் விவரித் துள்ளார். அதன்பின்னர் தாசில்தார் பதவியையும் உதறிவிட்டு விடுதலை போரில் முழுமையாக ஈடுபட்டார். அப்போது அவர் எழுதிய ‘காந்தி மாலிகை’ என்ற நூலுக்கு அன்றைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி செய லாளராக இருந்த பெரியார் எழுதிய முன்னுரையில் குறிப் பிடுகிறார்,“எனது நண்பர் ஜனாப் பீர் முகமது பாவலர் அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் சில காலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருந்தார். பின்னர் சிவகங்கை ஜமீனில் ஒரு உதவி தாசில்தாராக இருந் திருக்கிறார். தாய் நாட்டிற்குத் தாம் செய்ய வேண்டிய கட மையை செய்வதற்காக தமது தாசில்தார் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்காலம் தேசத் தொண்டு புரியும் உண் மைத் தொண்டர்களில் ஒருவ ராய் திகழ்கிறார்.”

இவர் ‘காந்தி மாலிகை’ நூலில் காங்கிரஸ் இயக்கத்தின் உயர்வு, இந்து, முஸ்லிம் ஒற்று மையின் அவசியம், நாட்டுப் பற்று மற்றும் முன்னணித் தலைவர்கள் ஹக்கீம் அஜ்மல் கான், பண்டித மோதிலால் நேரு, சித்தரஞ்ன் தாஸ், ராஜாஜி, பெரியார், மதுரை மௌலானா, மடப்பாரை வெங்கட்ராம் ஐயர் உட்பட பலரை புகழ்ந்து எழுதியுள்ளார். ‘பாசமஞ்சரி’ என்ற நூலி லும் இதுபோல் தேசபக்த பாடல்களையும் கதர் பாடல் களையும் தேசத் தலைவர்கள் பற்றிய பாடல்களையும் எழுதியுள்ளார்.எழுதியதோடு இல்லாமல் வீதிவீதியாக அப்பாடல்களை உரக்கப்பாடி மக்களை விடுத லைப் போருக்கு தூண்டியுள்ளார்.

“செல்வோம் சிறைக் கூடமே!
தேசத் தொண்டுக் காகச்செல்வோம் சிறைக் கூடமே!
தேசபக்தர் தம்மை இடர் செய்யும்
அதிகார வர்க்கம்மோசம் போவது உண்மை!
அதன் முன் இறந்தால் வீரசொர்க்கம்”

வெறும் பேச்சும் எழுத்தும் மட்டுமல்ல செயலும் அப் படித்தான். முறுக்கு மீசையும் கதர் ஜிப்பாவும் கணீர் குரலில் பாடல்களும் கையில் கம்பும் தாங்கி வீதி நெடுக பாடிய தோடு அந்நியத் துணியை எரிக்கும் போரில் ஈடுபட்டார். காங்கிரஸ் விடுத்த அழைப்புகளை ஏற்று போர்க்களம் புகுந்தார். 1941ம் ஆண்டு சிறை யிலடைக்கப்பட்டார். சிறையி லும் இவரது பாடல்கள் சக கைதிகளுக்கு தேசபக்த டானிக்கானது.

1928லேயே கம்பம் பேரூ ராட்சியில் இவர் ஒரு வாசகசாலையை அமைத்தார். புத்தகங்களை வாசிப்பதோடு மக்களை வாசிக்கச் செய்வதிலும் இவருக்கு இருந்த ஈடுபாட்டின் சாட்சி அது.1941ம் ஆண்டு உணவு பஞ்சம் வந்தபோது அதற்கு எதிராக இவர் பாடிய பாடல்கள் மக்களிடம் பேருணர்ச்சியை வீறிட்டெழச் செய்தது.நேர்மையில் நாட்டம் மிகுந்த பாவலர் பீர்முகமது, நேர்மை தவறுகிற அதிகார வர்க்கத்தை எதிர்த்து பேசுவதிலும் பாடுவதிலும் நெஞ்சுறுதி யோடு கடைசிவரை இருந்தார். உத்தமபாளையத்தில் ஒரு தாசில்தார் மிகவும் மோசமானவராக லஞ்சப் பேர்வழியாக மக்களை வதைப்பவராக இருந்தபோது, பொது இடத் தில் அவரை நிற்கவைத்து கடுமையானச் சொற்களால் விமர்சித்தார். இவருடைய இந்தக் கடும் விமர்சனத்தால் மனமுடைந்த தாசில்தார் வெகுசீக்கிரத்திலேயே இறந்து விட்ட செய்தி அப்போது எல்லோராலும் பரவலாகப் பேசப்பட்டது.

1945ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி குமரி மாவட்ட பாவலர் செய்குத் தம்பியும் இவரும் ஒன்றாக கம்பத்தில் நடை பெற்ற மீலாத் விழாவில் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில் பேசுகிறபோது தன் உடல் நலன் சீர்கெட்டிருப்பதை சுட் டிக்காட்டி, “ஆவி அகத்தோ புறத்தோ என்று அல்லலுற்றி ருக்கும் இவ்வேளையிலே நான் பேச முற்படுகின்றேன். அநேகமாக இதுதான் எனது இறுதிப் பேச்சாக இருக் குமோ என ஐயுறுகிறேன்" எனக் கூறினார்.ஆம் அதுவே அவரது கடைசிப் பேச்சானது. 1945ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் உயிர் நீத்தார்.

கம்பம் பள்ளத்தாக்குகளி லும் மலைமுகடுகளிலும் காற் றோடு இவரது தேசபக்த கணீர் பாடல்களும் நிறைந் துள்ளன. எனில் மிகையாகுமோ?இப்படிப் பாடினால், யாருக்குத்தான் வீரம் வராது?

நன்றி: தீக்கதிர்
Labels: cumbum peer mohammed, theekkathir

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP