Monday, December 13, 2010

பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது: மதுரையில் ஜெயகாந்தன் பேச்சு





மதுரை, டிச. 13-

பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார்.

மீனாட்சி புத்தக நிலையத்தின் பொன்விழா மதுரையில் 12ம்தேதி [12.12.2010] நடைபெற்றது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு ஜெயகாந்தன் பேசுகையில் கூறியதாவது:

தமிழில் பிழைதிருத்தவே நான் அச்சகத்தில் பணிபுரிந்தேன். அங்கேதான் எனக்கு மீனாட்சி புத்தக நிலையத்தின் செல்லப்பன் அறிமுகமானார். நான் திருத்தம் செய்த புத்தகத்தில் பிழைகளே இருக்காது. ஆகவே, ஏராளமான பதிப்பகத்தார் என்னை பிழைதிருத்த நாடினர்.

மதுரையில் 1953ல் எனது ஆசான் எஸ்.ராமகிருஷ்ணன் தந்த ஊக்கத்தால், அவரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்திலேயே எழுத ஆரம்பித்தேன்.

எனது எழுத்தைப் படித்தவர்கள் அதை மறப்பதில்லை. அவர்கள் வேறு எழுத்தாளரைத் தேடிப் போவதில்லை. என்னை அளவுகோலாக வைத்தே மற்றவர்களது எழுத்தைப் பார்க்கிறார்கள். நான் இப்போது நிறைய படிக்கிறேன். இப்போது படிக்கையில் சங்க இலக்கியம் புரிகிறது. பிறமொழி மீதுவெறுப்புக் கொள்வதன் மூலம் தமிழார்வம் ஏற்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழறிவு ஒருவரைக் குறையுள்ளவராக, தற்புகழ்ச்சிக்காரராக ஆக்குவதில் எனக்கு சம்மதமில்லை.

இப்போது எழுதுகிறவர்கள் அதிகம் இருப்பதைப் போல, எழுத்தைப் படிப்பவர்கள் அந்த அளவுக்கு அதிகம் இல்லை என்பதில் வருத்தமாக உள்ளது. உண்மையில், எழுதுகிறவர்கள் மெஜாரிட்டியாகவும், படிப்போர் மைனாரிட்டியாகவும் உள்ளனர்.

தம்மொழி மீது அன்பு கொண்டவர்களுக்குப் பிற மொழி மீது வெறுப்பு வராது. மற்றமொழிகளிலேயே தமிழ்தான் சிறப்பானது என்று ஆராய்ந்து கூறுவதற்கும், அன்பு உணர்வால் கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எனக்குத் தமிழ் மீது அபிமானம் உள்ளது; பற்று இல்லை. பற்றானது விடுபடு வது, விட்டுப்போவதாகும். ஆனால், அபிமானம் விட முடியாதது. இது வடமொழிச் சொல்லாக இருப்பதில் எனக்கு வருத்தம்தான்.

தமிழில் பல வார்த்தைகள் இல்லாமல் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. அதைச் சேர்த்துக்கொள்ளலாம். தொல்காப்பியர்கூட, திசைச்சொல், வடசொல் எனக் கூறியுள்ளார். வடமொழிக்கும், தமிழுக்கும் மரபார்ந்த சொந்தம் உள்ளது.

வலிந்து தமிழாக்கம் செய்வது சரியல்ல. மாறுபட்ட அர்த்தத்தைத்தரும் போது மொழி கடன் வாங்குகிறது. தேசமே கடன் வாங்கும்போது மொழி வாங்கு வது சரியானதே. கம்பன் அதுபோல நிறையச்சொற்களைப் பயன்படுத்துகிறார்.

இதுபோல கூறுவதால், எனது தமிழார்வத்தில் பலருக்கும் ஐயம் ஏற்படுகிறது. இதைப் பாரதியாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது. தமிழில் சிறப்பு ‘ழ’ கரம் உள்ளது போல் வேறு மொழிகளில் இல்லை. ஆனால், இதை மாவட்டத்துக்கு மாவட்டம் தங்களுக்கு ஏற்பவே உச்சரிக்கிறார்கள்.

தமிழ், குறைவில்லாதது. வால்மீகி ராமாயணம் ராமரை சிறந்த அரசராகக் காட்டியது. கம்பராமாயணம் ராமரை சிறந்த மனிதராகக் காட்டியது. காப்பி யங்களும், புராணங்களும் வடமொழியில்தான் உள்ளன . அவற்றைக் கற்றால் தான் தமிழின் பெருமை விளங்கும். பிறமொழிகளைத் தெரிந்தாலே தமிழின் பெருமை விளங்கும்.

மில்டனைவிட கம்பன் சிறந்தவன் என எஸ்.ராம கிருஷ்ணன் கூறுவார். பிற மொழியைக் கற்பதால் நமது பெருமை குறையாது. நாம் யாருக்கும் அடிமை யாகமாட்டோம். பெருமையுடையோரைப் பெருமைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜெயகாந்தன் பேசினார்.


நன்றி: தீக்கதிர் (13.12.2010)

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP