Friday, December 3, 2010

சிவப்பு உலகில் இரு முக்கிய நிகழ்வுகள்:



* கம்யூனிஸ்ட் மற்றும்

தொழிலாளர் கட்சிகளின்

12-வது சர்வதேச மாநாடு

* * *

*ஐரோப்பிய இடதுசாரிகளின் மூன்றாவது காங்கிரஸ்



"தன்னலம் கருதா செம்படை இங்கே சமுத்திர அலையாய் சீறட்டும்!
சரித்திர நெடுநாள் சூழ்ச்சியின் அடிமை சங்கிலி உடைந்து நொறுங்கட்டும் !!
* * * * *
போர்வெறி கொண்ட ஏகாதிபத்திய சதிகளை வென்றிடும் நம்படைகள்!
பூமியின் ஐந்து கண்டங்கள் எங்கும் பறக்குது நமது செங்கொடிகள்!!"



கவிஞர்
பரிணாமன், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உலகளாவிய தாக்கத்தை விதந்தோதும் வகையில் இந்தப் பாடலை எழுதி முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில்தான் உலகில் எத்தனை மாற்றங்கள்!


சோவியத் யூனியனின் வீழ்ச்சி, சோஷலிச முகாமின் தகர்வு, ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் உலகம், நடுநிலை நாடுகளின் நிலைகுலைவு, ஐக்கிய நாடுகள் சபை உரிய பங்காற்ற இயலாத நிலை, உலக வர்த்தக முறைமையில் அதிரடி நிகழ்வுகள் என எண்ணற்ற மாற்றங்கள் உலக அரங்கில்...



அதுமட்டுமா? அதுகாறும் சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள், மார்க்சீயவதிகள் என்றெல்லாம் தம்மைக் கருதியும், நம்பியும், கூறியும் வந்தவர்கள் கூடத் தம்மை சோஷலிச ஜனநாயகவாதிகள் என அடையாளம் காட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். இது சோஷலிச முகாமைச் சேர்ந்த சில கட்சிகளுக்கும் பொருந்தும்.



ஆனால்
, உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த முற்போக்காளர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரும் ஒரு விஷயத்தை நன்கு உணர்ந்தனர் : வீழ்ந்தது சோஷலிசமும் அல்ல; வென்றது முதலாளித்துவமும் அல்ல என்பதை!



சோஷலிசம் என்ற பெயரால் அரங்கேற்றப்பட்ட அத்துமீறல்கள்; மார்க்சீய வழிமுறைகளிலிருந்து விலகிச்சென்றதால் நேர்ந்த சறுக்கல்கள்; சகல அதிகாரங்களும் மக்களுக்கே என்பதை மறந்து கட்சியினரின் அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற அலங்கோலங்கள்; நண்பர்கள் யார்-பகைவர்கள் எவர் என்பதை மறந்து மாயா உலகில் செய்த சஞ்சாரங்கள்!-- இவையும், இவைபோன்ற இன்னபிற காரணங்களும் தான் சோஷலிச முகாமின் பின்னடைவுகளுக்கும், அதற்கு நேர்ந்த விபரீத விளைவுகளுக்கும் வழிகோலின என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்.



வென்றது
முதலாளித்துவமாக இருக்கும் பட்சத்தில், என்றைக்கும் இல்லாத அளவுக்கு முதலாளித்துவ உலகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் நெருக்கடிக்குக் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்லும் சமாதானம் என்ன? கம்யூனிச எதிர்ப்பாளர்களின் சொர்க்க பூமியாக எப்போதும் போற்றிப் புகழ்மாலை சூட்டப்படுகின்ற அமெரிக்கா இன்று வரலாறு காணாத அளவில் அடுக்கடுக்காகப் பிரச்சனைகளை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் சந்திக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதற்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார்கள்?



புரையோடிப்போன
சுரண்டல் கொடுமைகளுக்கு முடிவுகட்டி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சுபிட்சம் கொணர்வதுதான் சோஷலிசம். வரலாற்றின் போதனையை ஏற்று, சோஷலிசத்தின் பெயரால் நிகழ்ந்த அக்கிரமங்களுக்கு முடிவுகட்டி, மெய்யான சோஷலிசப் பாதையில் பயணத்தைத் தொடர்வதன் மூலம் உலகைக் காத்து, மனித குலத்தின் சர்வாம்ச வளர்ச்சிக்கு வழிவகுப்பதுதான் கம்யூனிஸ்டுகளுக்குக் காலம் இட்டிருக்கும் கட்டளை!



தனிமரம்
தோப்பாகாது; உதிரிச்செயல்பாடுகள் முன்னேற்றத்துக்கு உதவாது என்பதை உலகுக்கு உணர்த்திக்காடியவர்கள் கம்யூனிஸ்டுகள். இருந்தபோதிலும், இந்த உண்மைகளையெல்லாம் மறந்துவிட்டு, தன்போக்கில், உதிரிகளாகச் செயல்பட்டதும்கூட சோஷலிச முகாம் சந்தித்த பின்னடைவுகளுக்குக் காரணம் எனில் மிகையில்லை.



உலகக்
கம்யூனிச இயக்கத்தில், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்கிற அணுகுமுறையின் தேவை உணரப்பட்டபோதிலும், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளிடையே நிலவும் பகையற்ற முரண்பாடுகளின் விளைவாகக் கூடிப் பேசுவதும், அனுபவப்பகிர்வும் இயல்பாகவே அவர்களுக்கு வாய்த்துவிட்ட நல்வழி. இடையில் இது மறக்கப்பட்டது துரதிருஷ்டம். இனிமேலும் இதனை அலட்சியம் செய்வது மடைமை என்பதை உணர்ந்ததால்தான் இத்தகைய சர்வதேச மாநாடுகள்!



கம்யூனிஸ்ட்
மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பன்னிரண்டாவது சர்வதேச மாநாடு, நிறவெறி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி முற்போக்கு ஜனநாயக திசைவழியில் பயணித்துக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவில்!



பாட்டாளிகளின்
முதல் புரட்சியின் களமாகவும் இன்னும்கூட ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுக்கும் ஆற்றல் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் தாயகமாகவும் விளங்குகின்ற பாரீஸ் நகரில் ஐரோப்பிய இடதுசாரிகளின் மூன்றாவது மாநாடு!



இந்த
இரண்டு வரலாற்று நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் என்பது நம் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. அதாவது, டிசம்பர் மூன்று முதல் ஐந்து வரை!



மாநாட்டு
நிகழ்வுகள்,
முடிவுகள், பிரகடனங்கள் தொடர்ந்து சஞ்சிகையில் வெளியாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்! --விதுரன்

0 கருத்துரைகள்:

  © Free Blogger Templates Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP